Friday, September 11, 2009

என்.ஸி. வசந்த கோகிலத்தின் பின்நவீனத்துவ வாரிசு -ஷ்ருதி ஹாசன்


திரைப்படப் பாடலை செழுமைப்படுத்த வேண்டுமெனில் அதில் ஈடுபடுபவருக்கு தத்துவம், சமூகம், கலாச்சாரம் போன்ற துறைகளில் கூர்த்த மதியும், தெளிந்த சிந்தனையும் தேவை. இவை இல்லாவிட்டால் குறைந்த பட்சம் அவருடைய மொழி சார்ந்த இலக்கியம் அவருடைய உயிரோடும் மூச்சோடும் இரண்டறக் கலந்திருக்க வேண்டும். கண்ணதாசனிடம் மேற்கண்ட இரண்டுமே இருந்தன. வைரமுத்துவிடம் இருந்தது இரண்டாவது. இப்போது சங்க காலம் முதல் பாரதி வரையிலான பாரம்பரியத்திலிருந்து இலக்கியத்தையும், மேற்கு உலகின் சிந்தனாவாதிகளிடமிருந்து தனது தத்துவப் பார்வையையும் ஸ்வீகரித்தபடி ஒரே பாடலில் தனது விசேஷமான முத்திரையைப் பதித்தபடி இறங்கியிருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.

அதே போல் கமல் டாடி, மனுஷ்ய புத்திரன் அங்கிள் போன்ற மூத்த தலைமுறையினருடன் இணைந்து பணி புரிந்தாலும் ஷ்ருதி ஹாசன் தனது முதல் படத்திலேயே தமிழ்ச் சூழலுக்கு மிகப் புதியதான, இளைய தலைமுறையினருக்கான இசையை வழங்கியிருக்கிறார். அவருடைய குரலைக் கேட்கும் போது என்.ஸி. வசந்த கோகிலத்தின் பின்நவீனத்துவ வாரிசோ, அவர் ஆரம்பித்துத் தொடராமல் விட்டதைப் பூர்த்தி செய்ய வந்த பெண்ணோ என்றெல்லாம் தோன்றுகிறது.

உன்னைப் போல் ஒருவனில் ஷ்ருதி ஹாசன் சிருஷ்டித்திருக்கும் பாடல்களைக் கேட்டபோது எனக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.ஆர். ரஹ்மான் தமிழ் சினிமா இசையில் ஏற்படுத்திய புரட்சிகரமான மாற்றம் ஞாபகம் வருகிறது. ரஹ்மானுக்கு முன்னால் – 80களில் – தமிழ் சினிமா இசை ஒரு குறிப்பிட்ட pattern- க்குள் மாட்டிக் கொண்டிருந்தது. அதே போல் என்னதான் ஹாரிஸ் ஜெயராஜும், யுவன் ஷங்கர் ராஜாவும் பல அருமையான பாடல்களைக் கொடுத்தாலும் அவர்களின் பாணியும் தமிழ் சினிமா இசைக்குரிய ஒரு pattern- க்குள்ளேயே இயங்குவதைத்தான் நாம் பார்க்கிறோம். இங்கே நான் சொல்வதை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டுமானால் தேவ்.டியிலும், குலால்-இலும் இடம் பெறும் பாடல்களுக்கும் மற்ற இந்தி சினிமாப் பாடல்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனித்துப் பாருங்கள்.

தில்லி-6இன் பாடல்களை நீங்கள் ரசிக்கலாம். அது ஒரு அற்புதம்தான். ஆனால் தேவ்.டி, குலால் பாடல்கள் இந்தி சினிமா இதுவரை பார்த்திராத வேறு ஏதோ ஓர் திசையில் சென்றிருக்கின்றன. அதற்கு முன்னால் இருந்த இந்திப் பாடல்களுக்கும் இந்த இரண்டு படங்களின் பாடல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது வேறு; இது வேறு. அதே போல், இதுவரையிலான தமிழ் சினிமா பாடல்களுக்கும் ஷ்ருதி ஹாசன் உருவாக்கியிருக்கும் பாடல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது வேறோர் திசையில் நடந்த மிகப் பெரிய பாய்ச்சல் ( quantum leap). இது பற்றி நிறைய எழுதலாம். ஆனால் நீங்களே கேட்டுப் பார்ப்பதே நல்லது. உதாரணமாக, உன்னைப் போல் ஒருவன் என்ற பாடலில் வரும் கிதார், வானம் எல்லை இல்லை என்ற பாடலில் வரும் தவில், அல்லா ஜானேயில் வரும் நரம்புக் கருவிகள். உலக இசையை உள்வாங்கிய ஒருவரால்தான் வாத்தியக் கருவிகளை இந்த விதத்தில் பயன்படுத்த முடியும்.

அடுத்து, உன்னைப் போல் ஒருவனில் மனுஷ்ய புத்திரன் எழுதியுள்ள அல்லா ஜானே என்ற பாடலைப் பாடியிருக்கும் கமல்ஹாசன் பற்றி எழுதியே ஆக வேண்டும். பாடுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட பாடகர்களை விட நன்றாகப் பாடியிருக்கிறார் கமல். இது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. நான்கு பகுதிகளாக உள்ள அல்லா ஜானேவின் முதல் பகுதியைப் பாடும் போது அவர் குரல் தேனாய் இழைகிறது. அந்தக் காலத்து பி.பி. ஸ்ரீனிவாஸின் குரலில் காணும் இனிமை அது. இவ்வளவு இனிமையான குரலை வைத்துக் கொண்டு அவர் இவ்வளவு காலம் என்ன செய்து கொண்டிருந்தார்? தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த பாடகரும், மிகச் சிறந்த சிரிப்பு நடிகருமான கமல் தன்னை ஒரு புத்திஜீவி என்று நினைத்துக் கொண்டு செய்யும் காரியங்கள் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஆனால் இந்தப் படத்தில் அவர் பாடியுள்ள பாடல்கள் அவரை ஒரு முதல்தரப் பாடகராக நிறுவுகின்றன.

அல்லா ஜானேவிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. முதல் பகுதியை தேனினும் இனிய nasal குரலில் பாடி விட்டு ‘வீடுகள் எங்கும் வேதனை நிழல்கள் ’ என்று தொடங்கும் இரண்டாம் பகுதியை கிட்டத்தட்ட சி.எஸ். ஜெயராமன் குரலில் பாட ஆரம்பித்து விடுகிறார். அதே குரல்தான் ’ பிள்ளைகள் நடுங்கும் பேய்களின் நடனம் ’ என்ற மூன்றாம் பகுதியிலும், ’ வெல்பவர் இல்லா போர்கள் இங்கே ’ என்ற நான்காம் பகுதியிலும் தொடர்கிறது. கமல் தன் குரலில் பலவித மாயவித்தைகளைக் காட்டினாலும் இந்தப் பாடலில் அது பொருந்தவில்லை. முதல் பகுதியில் அவர் காட்டும் இனிமையான குரலிலேயே பாடல் முழுதும் தொடர்ந்திருக்கலாம். கைலாஷ் கேர் தில்லி-6 இல் ’ மோலா ’ பாடலில் காட்டிய அற்புதத்தைக் காண்பிக்கக் கிடைத்த தருணத்தை கமல் தவற விட்டு விட்டார்.

இந்தப் படத்துக்காக கமலுக்கு சிறந்த பாடகருக்கான தேசிய விருதும், ஷ்ருதி ஹாசனுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும், மனுஷ்ய புத்திரனுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதும் கிடைக்கும். கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இறுதியாக ஒன்று. விருதுகளை விட முக்கியமானது இந்தப் படத்தின் இசை தமிழ் சினிமா இசையில் ஏற்படுத்தப் போகும் புரட்சிகரமான மாற்றங்கள். அதற்காக, ஷ்ருதி ஹாசனுக்கு விசேஷமான பாராட்டுகளும், வாழ்த்துகளும்...

***

வாழ்த்துக்களுடன் சாரு நிவேதிதா